தேசிய கடற்படை பொறியியல் கல்லூரி | கடற்படை கல்லூரி |

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள தேசிய கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்.

 

கடற்படையில் மெரைன், எலெக்ட்ரிக்கல்ஸ், எலெக்ட்ரானிக்ஸ், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் ஆகிய பிரிவுகளுக்குத் தேவைப்படும் அதிகாரிகளை உருவாக்குகிறது இக்கல்லூரி.

 

பி.டெக். படிப்பில் ஆண்கள் மட்டுமே சேர முடியும். பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் சராசரி 75 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். 

 

உடற் தகுதி முக்கியம். அதாவது, உயரம் 157 செ.மீ, மார்பளவு 5 செ.மீ. விரிவு இருக்க வேண்டும். நல்ல கண்பார்வை இருக்க வேண்டும்.

பிளஸ் டூ மதிப்பெண் மற்றும் சர்வீஸ் செலக்ஷன் போர்டு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியுடையோர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வில் உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும்.

 

தேர்வு செய்யப்படுவோருக்கு கோவாவில் உள்ள இந்திய கடற்படை அகாதெமியில் 6 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி தரப்படும். அதன்பின் புனே கடற்படை பொறியியல் கல்லூரியில் அவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். அங்கு 4 ஆண்டுகள் படித்த பின் பி.டெக். பட்டம் வழங்கப்படும். புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இப்பட்டத்தை அளிக்கும்.

 

சரி, இப்படிப்பின் சிறப்பு என்ன என்றுதானே கேட்கிறீர்கள். நான்கு ஆண்டுக்குமான உணவு, உடை, விடுதி செலவுகள், பயிற்சிக் கட்டணம் அனைத்தையும் கடற்படையே ஏற்றுக்கொள்கிறது. எனவே ஒரு நயா பைசா செலவு இல்லாமல் பயிற்சியை முடித்து விடலாம்.

 

 

 

அது மட்டும்தானா? படித்து முடித்த கையோடு நல்ல வேலை.

ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகு லெப்டினென்ட் பதவி அளிக்கப்படும். அப்போது மாதம் ரூ.11,800 ஊதியம் கிடைக்கும். படிகள், சலுகைகள் தனி. வைஸ்-அட்மிரல் வரை பதவி உயர்வு பெறலாம்.

 

http://www.nausena-bharti.nic.in/ என்ற இணைய தளத்தில் முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம். சென்னையில் கடற்படை அலுவலகத்தை அணுகியும் விவரம் பெறலாம்.