அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியதில் தலையாயப் பங்கு வகித்தவரும் அமெரிக்காவின் மூன்றாம் குடியரசுத் தலைவருமான தாமஸ் ஜெபர்ஸன் பத்திரிகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகையில், ""பத்திரிகைகள் இல்லாமல் அரசாங்கம் மட்டும் அல்லது அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நான் துளியும் தயங்காமல் அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்பதையே தேர்ந்தெடுப்பேன்'' என்றார். தகவல் என்பது மக்களாட்சியின் நாணயம் (currency) என்றார் அவர். ஊடகச் சுதந்திரமும் ஒரு சமூகம் நீதியுடன் செயல்படுவதற்கு அச்சாணியைப் போன்றவை.
மக்களாட்சி சிறப்பாகச் செயல்படத் தங்குதடையற்ற தகவல் மற்றும் செய்திப் பரிமாற்றங்கள் மிக அவசியம். ஆனால் இன்றைய மையநீரோட்ட ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்படுகளைப் பார்க்கிறபோது இவர்களை மனத்தில் வைத்து ஜெபர்ஸன் அப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பதைச் சொல்லத் தேவையில்லை.இன்று உலகெமங்கும் எல்லா நாடுகளிலும் அரசாங்கம், மைய நீரோட்ட ஊடகங்கள், மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகோர்த்துச் செயல்படுவதையும் இவற்றின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருப்பதையும் புரிந்து கொள்ள ஒருவர் மேதையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஊடக நிறுவனங்கள் தாங்களே பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களாகவும் கார்ப்பரேட் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுபவையாகவும் (விளம்பரங்கள் மூலம்) பெரும்பாலான ஊடகவியலாளர்கள் அரசாங்கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சேவகர்களாகவும் மாறிவிட்ட நிலையில் பத்திரிகைள் ஆற்ற வேணடியது என்று ஜெபர்ஸன் எதிர்பார்த்த பணியை இன்று ஆற்றக்கூடியது இணையமாகவே இருக்கிறது.
சமீபத்தில் அம்பலமான நீராடியா விவகாரம் இந்த மூன்று பிரிவினருக்கும் இகுடையில் இருக்கும் .றவின் தன்மையையும் இந்திய மக்களாட்சியின் நான்காம் தூணின் லட்சணத்தையும் (மற்ற மூன்று தூண்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை) வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. இந்த விபகாரத்தை மையநீரோட்ட ஊடகங்கள் அனைத்தும் (ஓபன் மற்றும் அவுட் லுக் தவிர்த்து) இருட்டடிப்பு செய்ய முயன்ற வேளையில் இது லட்சக்கணக்கானவர்களால் இணையத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இனி இதைப் பற்றி மௌனம் சாதிப்பது தங்களது முகத்திரையைக் கிழித்துவிடும் என்பதை உணர்ந்த பின்னரே மைய நீரோட்டப் பத்திரிகைகள் இதைப் பற்றி செய்திகள் வெளியிடத் தொடங்கின.
அமெரிக்க ராணுவத்தினர் ராய்ட்டர் செய்தியாளர்கள் இருவர் மீதும் அப்பாவிப் பொதுமக்கள் பலர் மீதும் ஹெலிகாப்டரிலிருந்து நடத்திய தாக்குதல் வீடியோவை 2011 ஏப்ரல் மாதம் 5இல் அம்பலப்படுத்தியதிலிருந்து, ஆப்கானிஸ்தான் (2010 ஜூலை 25), ஈரான் (2010 அக்டோபர் 22) போர்க் குறிப்புகள் மற்றும் அமெரிக்கத் தூதரகக்கேபிள்களை (2010 நவம்பர் 28) அம்பலப்படுத்தியதுவரை விக்கிலீஸின் பயணம் ஓர் அசாதாரணமான, வீரஞ்செறிந்த பயணம். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க் குறிப்புகள் அமெரிக்க ராணுவத்தின் அயோக்கியத்தனங்களை, கொடூரங்களை அம்பலப்படுத்தின என்றால் உலகெங்குமுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகளன் கேபிள் செய்திகள் மூலம் அமெரிக்கா சர்வதேச அரசியலை எவ்வாறு கையாள்கிறது என்பதும் அம்பலமாகியுள்ளது. அம்பலம் என்று சொல்கிறபோது ஏதோ இதுவரை உலகிற்குத் தெரியாதிருந்த விஷயங்கள் இப்போதுதான் தெரியவந்திருப்பதாக அர்த்தமல்ல.
விக்கிலீக்ஸில் வெளியாகியுள்ள விஷயங்கள் பல ஏற்கனவே தெரிந்தவைதான். உலகெங்குமுள்ள பல முற்போக்கான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் இவற்றை ஏற்கனவே அம்பலப்படுத்தியுள்ளனர். விக்கிலீக்ஸ் குறித்த கடந்த கட்டுரையில் நான் கூறியதுபோல இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்கள் அமெரிக்க ராணுவ அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் கைப்பட எழுதியவை என்பதுதான் இவற்றின் சிறப்பு.
ஐ.நா.அவையின் உயரதிகாரிகளை உளவுபார்க்க அமெரிக்க அரசு உத்திரவிட்டது. ஈரானின் அணுசக்தி உற்பத்தி மையங்கள் அழிக்கப்படவேண்டுமென்று அமெரிக்காவிடம் சவுதி அரேபியாவின் மன்னர் வைத்த கோரிக்கை, அல்லது லஷ்கர் -இ-தய்பாவைவிட இந்து அடிப்படைவாதச் சக்திகள் ஆபத்தானவை என்ற ராகுல் காந்தியின் கருத்து, காஷ்மீரில் மனித உரிமைகள் இந்தியப் பாதுகாப்புப் படைகளால் மிக மோசமாக மீறப்படுகின்றன என்று சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் கூறியது என எதுவுமே அதிர்ச்சியளிக்கும் விஷயம் அல்ல. இந்த விஷயங்கள் சம்பந்தப்பட்டவர்களை முகம் சிவக்க வைக்கும் அல்லது தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் என்பதைத் தவிர இவற்றால் பெரும் மாற்றங்கள் ஏதும் சர்வதேச அரசியலிலோ இந்திய அரசியலிலோ ஏற்படப்போவதில்லை. காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மனித உரிமைகள் இந்தியப் பாதுகாப்புப்படைகளால் மீறப்படுவது என்பது அனைவருக்கும் தெரிந்தது.
அமெரிக்கா உட்படப் பல நாடுகளின் அரசாங்கங்கள் பயப்படுவது இப்போது வெளியாகிவிட்ட ரகசியங்களுக்காக அல்ல. இனி ரகசியம் என்று எதையும் மக்களிடமிருந்து மறைப்பது சாத்தியமல்ல என்னும் நிலை உருவாகிக்கொண்டிருப்பதே இவர்களின் பெரும் அச்சம். விக்கிலீக்ஸ்போல், ஜூலியன் அஸாஞ் மற்றும் பிராட்லே மேனிங் போல பலர் உருவாகிவிடக் கூடாது என்பதே அமெரிக்கா மற்றும் பலநாட்டு அரசுகளின் தீவிரக் கவலை.
எப்பாடுபட்டாவது அஸாஞை ஒழித்துக்கட்ட அமெரிக்கா முயல்கிறது. இந்த முயற்சியில் அமெரிக்காவிற்கு எந்த அளவிற்கு வெற்றிகிட்டும் எனத் தெரியவில்லை. ஆனால் வெற்றிக்காக அது எதை வேண்டுமானாலும் செய்யும் என்பது மட்டும் நமக்குத் தெரியும். இப்போது அமெரிக்காவின் கையில் கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பெண்கள் இருவர் அஸாஞ் மீது தொடுத்துள்ள பாலியல் வன்முறை வழக்கு.
ஜூலியன் அஸாஞ்மீது ஸ்வீடன் அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு சிக்கல்கள் நிறைந்தது. தெளிவற்றது.
உண்மையில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை இதில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் யூகிப்பது அவ்வளவு எளிதல்ல என்று லண்டன் த கார்டியன் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது மிகவும் சரி. ஸ்வீடன் நாட்ட வரும் Christian Association of Social Democrats என்ற அமைப்பின் உறுப்பினருமான பெண் ஒருவர் அஸாஞ் பேசுவதற்கான ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். 2010 ஆகஸ்ட் 11ஆம் தேதி ஸ்வீடன் வந்தார் அஸாஞ். அந்தப்பெண் சிலநாட்கள் வெளியூர் செல்லவிருந்ததால் அவரது வீட்டிலேயே அஸாஞ் தங்கிக்கொள்ளலாம் என்று ஏற்பாடானது. அந்தப்பெண் 14ஆம் தேதி வெளியூரிலிருந்து திரும்பிய பிறகு இருவரும் அதே நாளில் Social Democrats'Brotherhood Movement என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.
அதில் ""போர் மற்றும் ஊடகத்தின் பங்கு'' என்னும் தலைப்பில் நடந்த அந்தக் கருத்தரங்கில் அஸாஞ் முக்கியப் பேச்சாளார்.
அன்று இரவு இருவரும் உடலுறுவு கொண்டனர். தான் காண்டம் பயன்படுத்த வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஆனால் காண்டம் இல்லாமல் உடலுறவு கொள்ள அஸாஞ் முயன்றதாகவும் பின்னர் தனது வற்புறுத்தலால் காண்டம் பயன்படுத்தியதாகவும் ஆனால் பயன்படுத்தியபோது அதை வேண்டுமென்றே அஸாஞ் கிழித்துவிட்டதாகவும் அந்தப்பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே கருத்தரங்கில் அஸாஞ் சந்தித்த மற்றொரு பெண்ணுடன் சில நாட்கள் கழித்துக் காண்டம் இல்லாமல் உடலுறவுகொள்ள முயன்றதாகவும் அதற்கு அந்தப்பெண் மறுத்துவிட்டதால் பின்னர் காண்டம் பயன்படுத்தியதாகவும், ஆனால் பின்னர் தான் தூங்கிக்கொண்டிருந்தபோது காண்டம் இல்லாமல் தன்னுடன் அஸாஞ் உடலுறவு கொண்டுவிட்டதாகவும் அந்த மற்றொரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். பெண்கள் இருவருமே இதைப்பற்றி உடனடியாக எந்தப் புகாரையும் காவல்துறையில் பதிவு செய்யவில்லை என்பதுடன் அந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு அடுத்த சில நாட்களும் அஸாஞ் கடன் சுமுகமான உறவுடனேயே இருந்துள்ளனர்.
ஸ்வீடன் நாட்டின் சட்டங்கள் Whistle-களுக்கு மிகுந்த பாதுகாப்பளிப்பதாக இருப்பதால் அந்நாடு, விக்கிலீக்ஸ் அதிகப் பிரச்சினைகள் இன்றிச் செயல்படுவதற்கு உகந்தது என்று கருதி அங்கு தங்கி, வேலை செய்ய அனுமதி கேட்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி மனுச்செய்திருந்தார் அஸாஞ். பெண்கள் கொடுத்த புகார்களின் பேரில் அஸாஞ்சிற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. முதலில் இரு தரப்பு ஒப்புதலுடன் தொடங்கிய உடலுறவிலிருந்து பின்னர் தாங்கள் விலகிக்கொள்ள விரும்பியபோதிலும் அஸாஞ் வலுக்கட்டாயமாக உடலுறவைத் தொடர்ந்ததாகப் பெண்கள் குற்றம் சாட்டியிருந்தனர் ஒரு வழக்கு பாலியல் வன்முறை (rape) என்பதாகவும் மற்றொரு வழக்கு பாலியல் தொந்தரவு (molestation)என்பதாகவும் பதிவு செய்யப்பட்டது. அஸாஞ் பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் என்ற சந்தேகிப்பதற்கான காரணங்கள் ஏதுமில்லை என்பதாலும் பாலியல் தொந்தரவுகளுக்காகக் கைது வாரண்ட் தேவையில்லை என்பதாலும் கைது வாரண்ட் திரும்பப்பெறப்படுவதாக 21ஆம் தேதி ஸ்டாக்ஹோமின் தலைமை பிராசிக்யூட்டர் தெரிவித்தார்.
பாலியல் தொந்திரவு குறித்து மேலும் விசாரணைகள் தொடரும் என்று அவர் அறிவித்தார். அந்தப்பெண்களின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். காவல்துறையின் விசாரணையின்போது தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அஸாஞ் முற்றிலுமாக மறுத்தார். பாலியல் வன்முறையில் அஸாஞ் ஈடுபட்டார் என்று நம்புவதற்கு ஆதாரங்கள் இருப்பதாக பிராசிக்யூஷன் இயக்குநர் செப்டம்பர் ஒன்றாம் தேதி அறிவித்ததுடன் அது குறித்த விசாரணைகள் தொடரும் என்றார். அக்டோபர் மாத மத்தியல் எந்தக் குறிப்பான காரணங்களையும் கூறாமல் ஸ்வீடனில் தங்கி, பணியாற்ற அனுமதி கேட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பாலியல் வன்முறை மற்றும் பாலியல் தொந்திரவுகளுக்காக அஸாஞ் விசாரிக்கப்பட வேண்டுமென ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் தனது பணிகள் காரணமாக நவம்பர் மாதம் லண்டன் வந்த அஸாஞ், லண்டனிலுள்ள ஸ்வீடன் தூதரகத்திலோ ஸ்காட்லேண்ட் காவல்துறை அலுவலகத்திலோ அல்லது வீடியோ கான்பரன்ஸிங் மூலமோ தன்னை விசாரிக்கும்படி கேட்டுக்கெண்டார். ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத ஸ்வீடன் பிராசிக்யூசன் இயக்குநர் விசாரணைக்காக அஸாஞ் ஸ்வீடன் வந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக ஸ்வீடன் காவல்துறை சர்வதேசக் கைது வாரண்டைச் சர்வதேசக் காவல்துறை மூலம் நவம்பர் 20ஆம் தேதி பிறப்பித்தது.
டிசம்பர் 8ஆம் தேதி தானாக முன்வந்து அஸாஞ் தன்னை லண்டன் காவல்துறையிடம் ஒப்படைத்துக்கொண்டார். வெஸ்ம்மினிஸ்டர் நீதிமன்றத்திற்குக்கொண்டு செல்லப்பட்ட அவரை 14ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும் வரை சிறைக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. 14ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் பெயில் வழங்கியது.ஆனால் பிராசிக்யூஷன் தரப்பு மேல்முறையீடு செய்யப்போவதாக உடனடியாக அறிவித்ததால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்வரை மீண்டும் சிறையில் வைக்கப்பட்டார். 16ஆம் தேதி உயர் நீதிமன்றம் அவருக்குப் பெயில் வழங்கியது. விசாரணைக்காக அவர் ஸ்வீடன் கொண்டுசெல்லப்படுவது குறித்த extradition வழக்கு இனி நடக்கும். பொதுவாக extradition வழக்குகள் வழக்கமாக ஓரிரு மாதங்களில் முடிவடையும். ஆனால் இந்த வழக்கு மிகுந்த முக்கியத்துவமுடையது என்பதால் பல மாதங்கள் ஆகக்கூடும்.
பிரிட்டனிலிருந்து அஸாஞ்சை நேரடியாக அமெரிக்காவிற்கு அனுப்பக் கோருவது சட்டரீதியாக மிகக்கடினம் என்பதால் ஸ்வீடனிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்ல அமெரிக்கா தீவிரமாக முயல்கிறது. ஸ்வீடன் பல விதங்களில் மிக முற்போக்கான நாடாக இருந்தபோதிலும் அமெரிக்காவின் நெருக்குதலுக்கு எளிதில் பணிந்துவிடும் வாய்ப்புள்ளது என்பதால் இந்த வழக்கை மிகத் தீவிரத்துடன் அஸாஞ்சின் வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் நடத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் இறுதியாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் ஆகியவற்றை இந்த வழக்கு கடந்து வந்தாக வேண்டும்.
இவற்றில் மனித உரிமைகள் குறித்து மிகந்த அக்கறை கொண்டுள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் மற்றும் ஐரோப்பியக் கவுன்சில் அமெரிக்காவின் மிகுந்த கோபத்திற்குள்ளாகியிருப்பதை விக்கலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்க தூதாண்மை அதிகாரிகளின் கேபிள்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் ரகசியச்சிறைச்சாலைகள், கொடூரமான விசாரணை முறைகள், காலவரையறையில்லாமல் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணையில்லாமல் அடைத்துவைத்திருப்பது ஆகியவற்றை ஐரோப்பியக்கவுன்சில் கடுமையாக எதிர்த்துவருகிறது.
இதன்காரணமாகத் தனது அரசால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரிக்கப்படுவதற்கு அவர்களை அமெரிக்கா தனது நாட்டிற்கு அனுப்பக்கோருவதை ஐரோப்பியக்கவுன்சில் கடுமையாக எதிர்க்கிறது. அமெரிக்கா தன்னை விசாரணைக்கு அனுப்பிவைக்க கோரும்பட்சத்தில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தை, மற்ற அனைத்து நீதிமன்றங்களிலும் தனது வழக்கு தோற்கும்பட்சத்தில், அஸாஞ் அணுக முடியும். ஏற்கனவே மனித உரிமைகள் மீறலைக்காரணம் காட்டி அஸாங் ஸ்வீடன் அனுப்பப்படுவதை எதிர்த்து அவருடைய வழக்கறிஞர்கள் வாதங்களை வைத்துள்ளனர்.
அஸாஞ் குறித்த மிகத் தீவிரமான கிரிமினல் விசாரணையை அமெரிக்கா மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவித்துள்ளார். ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவத்தில் உளவுப் பிரிவில் பணிபுரியும் இளம் ராணுவ அதிகாரி பிராட்லே மேனிங்கிடமிருந்து ஆவணங்களை திருடச் சதிசெய்ததாக அவர்மீது குற்றம்சாட்ட அமெரிக்கா முயன்றுவருவதாகத் தெரிகிறது. ஊடகவியலாளர் என்னும் முறையில் தனக்குக் கிடைத்த ஆவணங்களைப் பொதுமக்களின் பார்வைக்காகத் தான் வெளியிட்டிருப்பதை மிக வெளிப்படையாக அஸாஞ் பலமுறை தெளிவுபடுத்தியிருப்பதால் இந்த அடிப்படையில் அவர்மீது வழக்கு தொடுப்பது அமெரிக்காவிற்கு எளிதானதாக இருக்காது என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள். மேலும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கிடையே உளவு பார்த்த குற்றத்திற்காக அல்லது மற்ற அரசியல் குற்றங்களுக்காக ஒருவரைத் தனது நாட்டிற்க அனுப்பிவைக்க கோர முடியாது என்பது அமெரிக்கா எதிர்கொள்ளும் மற்றொரு பிரச்சினை.
எல்லாவற்றையும்விட முக்கியமாக classified அரசாங்க ஆவணங்களை வெளியிடுவது அமெரிக்காச் சட்டத்தின்படி குற்றமல்ல. உளவுபார்த்த குற்றத்திற்காக அஸாஞ்மீது வழக்கு தொடுக்க வேண்டுமானால், அமெரிக்காவின் பாதுகாப்பிற்குக் குந்தகம் ஏற்படுத்தும் நோக்கம் அஸாஞ்சிற்கு இருந்தது என்பதோ அல்லது இந்த ரகசிய ஆவணங்களைத் தவறான முறையில் அரசாங்கத்திடமிருந்து பெற்றார் என்றோ நிரூபிக்கப்பட வேண்டும். ரகசிய ஆவணங்களை அரசாங்கக்கணினியிலிருந்து பதிவிறக்கம் செய்வதில் அஸாஞ் தொடர்பு கொண்டிருந்தார் என்றோ அல்லது பிராட்லே மேனிங்கை அவ்வாறு செய்யத்தூண்டினார் என்ற வகையிலோ அவர்மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஊடகவியலாளர் என்ற முறையில் ரகசியச் செய்திகளைச் சேகரிப்பதும் வெளியிடுவதும் அமெரிக்கச் சட்டங்களின்படி குற்றமல்ல. அமெரிக்க அரசியல் சாசனச் சட்டத்திற்கான மதல் திருத்தமானது பத்திரிகைகளுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளது. அந்த அடிப்படையி“ல தான்1971இல் டேனியல் எல்ஸ்பெர்க் அம்பலப்படுத்திய பென்டகன் ஆவணங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளிடுவதைத் தடுக்க முடியவில்லை. மேலும், இப்போது நியூயார்க் டைம்ஸ், த கார்டியன் உட்பட உலகின் மிக முக்கியமான மற்றும் புகழ் வாய்ந்த ஐந்து பத்திரிகைகள் இந்த கேபிள்களை வெளியிட்டுள்ளதால் விக்கிலீக்ஸ் நிறுவனர் அஸாஞ் தண்டிக்கப்படும் பட்சத்தில் இந்தப் பத்திரிகைகளும் அதே குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டி வரும். ஆகவே ஏராளமான சட்ட இடைஞ்சல்களை எதிர்கொள்வதைத் தவிர்த்து அமெரிக்கா மற்ற வழிகளை நாடக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அலாஸ்கா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும் கடந்த அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளருமான சாரா பாலின், அமெரிக்கா ஒசாமா பின்லேடனை வேட்டையாடுவதைப்போல அஸாஞ்சையும் வேட்டையாட வேண்டும் என்று பேசிவருகிறார். தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களின்போது சட்டத்திற்குப்புறம்பான வகையில் அஸாங் கையாளப்படுவதில் தயக்கம் காட்டக்கூடாது என்ற கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன. சட்டத்திற்குப் புறம்பாகக் கையாள்வது என்று சொல்லுவதன் அர்த்தம் என்ன என்பதைத் தனக்கு வேண்டாதவர்களை - சில நாடுகளின் தலைவர்களும் இதில் அடக்கம் - சி.ஐ.ஏ.எப்படித் தீர்த்துக்கட்டியது என்பதை அறிந்தவர்களுக்குப் புரியும்.
ஜூலியன் அஸாஞ்சைக்கொல்வதன் மூலம் எதையும் பெரிதாகச் சாதித்துவிட முடியாது என்பது அமெரிக்காவிற்குத் தெரியும் என்றாலும் இன்று அமெரிக்க அரசிற்கு இருக்கும் கோபத்திற்கு, கோபம் என்று சொல்வதுகூடத்தவறு, வெறிக்கு அது அஸாஞ்சைத்தண்டிக்க எல்லா வழிகளையும் முனையும் என்பதில் சந்தேகமில்லை.
ஹிட்லர், ஸ்டாலின், ஈரானின் கோமேனி உட்படப் பலரை 1927லிருந்து ஒவ்வொர வருடமும் ""அந்த வருடத்திற்கான மனிதர்'' என்று தேர்ந்தெடுத்துத் தனது அட்டையில் அவர்களது படத்தை வெளியிட்டுவரும் அமெரிக்காவின் மிகப்பிரபலமான வார இதழ் டைம் இந்தமுறை தனது வாசகர்கள் 2010 ஆம் ஆண்டுக்கான நபராகப் பெரும் வாக்கு வித்தியாசத்தில் (3,82,026 வாக்குகள்) அஸாஞ்சைத் தேர்ந்தெடுத்தபோதிலும் பத்தாம் இடத்தில் (18, 353 வாக்குகள் மட்டுமே பெற்ற) இருந்த பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்கை டைம் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்தது. அயத்துல்லா கோமேனியைக்கூட தேர்ந்தெடுப்பதிலும், அட்டைப்படத்தில் வெளியிடுவதிலும் தயக்கம் காட்டாத டைம் இதழ் அஸாஞ் விஷயத்தில் காட்டியிருக்கும் பெறும் சறுக்கலிலிருந்து அமெரிக்கா அரசால் அஸாஞ் எப்படிப்பார்க்கப்படுகிறார் என்பதையும் அமெரிக்கா மற்றும் உலகளாவிய வாசகர்கள் மத்தியல் அஸாஞ் பெற்றுள்ள செல்வாக்கையும் காட்டுகிறது.
அமெரிக்க செனட்டர் ஜோலிபர்மேனும் வலதுசாரி அமெரிக்கத் தலைவர்கள் பலரும் அளித்த நிர்ப்பந்தகளால் அமேசான் டாட்காம் நிறுவனம் அமெரிக்காவில் விக்கிலீக்ஸ் வலைத்தளத்திற்குத் தான் அளித்துவந்த சேவையை நிறுத்தியது. இதன்மூலம் விக்கிலீக்ஸை அமெரிக்காவில் முடக்க முடியும் என்பது லிபர்மேன் போன்றவர்களின் திட்டம். அமெரிக்கா அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் காரணமாக EveryDNS.net தனது சேவையை விக்கிலீக்ஸிற்குத் தருவதை விலக்கிக்கொண்டதன் காரணமாக விக்கிலீக்ஸ் வலைத்தளம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் அஸாஞ்சின் ஆதரவாளர்கள் ஏராளமான விக்கிலீக்ஸ் வலைத்தளங்களை உலகமெங்கும் உருவாக்கினர். விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளடக்கங்களையும் இந்த மிர்ரர் வலைத்தளங்களிலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.
ஒரு விக்கிலீக்ஸ் இருந்ததுபோய் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட டொமைன் பெயர்களில் விக்கிலீக்ஸ் மிர்ரர் வலைத்தளங்கள் செயல்படுகின்றன.
மேலும் இந்த வலைத்தளத்திற்காக நிதி திரட்டப்படுவதைத் தடுக்க பே பால், மாஸ்டர் கார்ட், விஸா ஆகியவை விக்கிலீக்ஸூக்குத் தங்கள் மூலம் செலுத்தப்படும் நன்கொடையைப் பரிமாற்றம் செய்ய, மறந்துவிட்டன. இதையடுத்து இந்த நிறுவனங்கள்மீது உலகமெங்குமுள்ள அஸாஞ் ஆதரவாளர்கள், hackers என்றழைக்கப்படும் கணினி நிபுணர்கள் இணையத் தாக்குதல் தொடுத்தனர். இதன் விளைவாக இவற்றின் செயல்பாடுகளின் வேகம் மிகவும் குறைந்து அவை பெரும் பிரச்சினையை சந்தித்தன.
தகவல் தொடர்புப் புரட்சி யுகத்தில் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளைக்கூடத் தனிமனிதர்கள் சிலரால் தொழில்நுட்ப உதவியுடன் முடக்க முடியும் என்பதைக் காட்டியதுடன் hackers மத்தியில் அஸாஞ்சிற்கு இருக்கும் செல்வாக்கையும் காட்டியது.உலகெங்கும் உள்ள ஊடகங்கள் ஜூலியன் அஸாஞ் பற்றிய செய்திகளால் நிரப்பப்பட்டிக்கும் வேளையில் ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர் ராய்ட்டர் நிறுவனத்தின் செய்தியாளர்கள் இருவர்மீதம் பத்துக்கும் மேற்பட்ட அப்பாவி ஈராக்கியர்கள் மீதும் ஹெலிகாப்டரிலிருந்து தாக்குதல் தொடுத்துக்கொன்ற கொடூரச் சம்பவத்தைக் காட்டும் வீடியோ முதல் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்க்குறிப்புகள் மற்றும் உலகெங்குமுள்ள அமெரிக்கத் தூதாண்மை அதிகாரிகளின் ரகசிய கேபிள் தகவல்கள் வரை அனைத்தும் அம்பலமாவதற்கு மூலகாரணமாக இருந்ததாகக் கூறப்படும் பிராட்லே மேனிங் பற்றிய செய்திகளை அவ்வளவாகக் காண முடிவதில்லை.
வெறும் 22 வயதே நிரம்பிய மேனின் அமெரிக்க ராணுவத்தின் உளவுத் துறையில் பணிபுரிந்த இளம் அதிகாரி. ஈராக்கிலுள்ள அமெரிக்கா ராணுவத்தில் பணிபுரிந்த இவர் அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளை உள்ளிருந்து கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர். ஈராக்கில் கலகம் மற்றும் வன்முறையைத் தூண்டுவதற்காகப் பிரசுரங்களையும் குறிப்புகளையும் விநியோகித்தார்கள் எனக் கூறித் தீவிரவாதிகள் என்ற பெயரில் சிறையில் அமெரிக்க ராணுவம் பலரை அடைத்திருந்தது.
அவர்களை விசாரிக்கிற பொறுப்பில் மேனிங் இருந்தார். அவர்கள் வெளியிட்டதாகவும் விநியோகித்ததாகவும் கூறப்படும் பிரசுரங்கள் உண்மையில் கலகத்தையோ வன்முறையையோ தூண்டுவன அல்ல என்பதையும் அவை ஈராக் பிரதமர் நௌரி - அல் மலிக்கிமீதான அரசியல் விமர்சனங்கள் என்பதையும் அரசாங்கத்தின் ஊழல்களை அம்பலப்படுத்துபவை என்பதையும் மேனிங் அறிந்தார். இதைத் தன் மேலதிகாரிகளிடம் கூறியபோது""இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் இன்னும் எவ்வளவு பேரைப் பிடிக்க முடியும் என்று பார்'' என்று அறிவுறுத்தப்பட்டார். ஈராக்கில் தனது நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா வெளியில் கூறுவதற்கும் உண்மையில் அமெரிக்கா நடந்துகொள்வதற்கும் இடையில் இருக்கும் மிகப்பிரம்மாண்டமான இடைவெளியை பறற மேலும் மேலும் அறிய நேர்ந்த மேனிங் அதிர்ச்சிக்குள்ளானார்.
அமெரிக்கா ராணுவத்திற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கும் Secret Internet Portocol Router Network இல் உள்ள இலட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை உலகிற்கு அம்பலப்படுத்துவ என அவர் முடிவுசெய்து அந்த ஆவணங்களை ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து அவற்றை விக்கிலீக்ஸ் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தார். 2010 மே மாதம் தான் நடத்திய ஓர் இணைய உரையாடலின்போது தனக்கு முன்பின் அறிமுகமற்ற அட்ரியன் லாமோ என்பவனிடம் தான் செய்த செயலைப் பற்றிய தகவலைப் பகிர்ந்துகொண்டார். இந்த லாமோ தன்மை பத்திரிகையாளன் எனவும் முன்னாள் hacker எனவும் தன்னால் முடிந்த உதவிகளை மேனிங்குக்குச் செய்வதாகவும் கூறினான். இதை நம்பிய மேனிங் தனது ரகசியத்தை அவனுடன் பகிர்ந்துகொண்டார்.
இவ்வளவு பெரிய ரகசியத்தை தன்னை வாழ்நாள் முழுவதும் சிறைக்கு அனுப்பக்கூடிய ஒரு ரகசியத்தை ஏன் முன்பின் தெரியாத ஒருவனிடம் மேனிங் கூற வேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தான் நினைத்திருந்தால் இந்த ரகசியங்களை ரஷ்யாவிற்கோ சீனாவிற்கோ விற்றுப் பெரும் பணம் சம்பாதித்திருக்க முடியும் எனவும் ஆனால் தனது நோக்கம் பணமல்ல மாறாக அமெரிக்கா ராணுவத்தின் அநியாயங்களை உலகிற்கு அம்பலப்படுத்துவதே என்றும் அந்த இணைய உரையாடலில் மேனிங் தெரிவித்திருந்தார். தன்னிடம் பகிரப்பட்ட இந்த ரகசியத்தைலாமோ உடனடியாக அமெரிக்க அரசிடம் தெரிவித்தான். இதன் விளைவாக அமெரிக்க ராணுவச் சட்டங்களின்படி கைது செய்யப்பட்ட மேனிங் இரண்டு மாதக் காலம் குவைத்தில் உள்ள ராணுவச் சிறையில் வைக்கப்பட்டு இப்போது கடந்த ஐந்து மாதக்காலமாக அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உணவுக்காகவும் மற்ற விஷயங்களுக்காகவும் அவர் சிறை அதிகாரிகளைப் பார்க்கமுடியும். மற்ற 23 மணி நேரம் தனிமையில் கழிக்கவேண்டும். அவருக்குப் படுப்பதற்குப் படுக்கையோ தலையணையோ எதுவும் தரப்படவில்லை. சிறையில் உடற்பயிற்சிகள் எதுவும் செய்யக்கூடாது என்று கட்டளை. வெளியாட்கள் யாரையும் சந்திக்கமுடியாத, வெளியுலக நிகழ்வுகள் எதையும் அறிந்துகொள்ள முடியாத (தொலைக்காட்சி, பத்திரிகைகள் எதுவும் கிடையாது) மிகக்கொடுமையான இந்த சூழலின் காரணமாக அவரது மனநிலை பாதிக்கப்பட்டுவருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய பேச்சு, சுதந்திர உரிமைகளை ராணுவ அதிகாரி ஒருவர் கோர முடியாது என்ற நிலையில் இனி அவரது வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிவதற்கான வாய்ப்புகளே அதிகம்.
மேனிங் பற்றிக் குறிப்பிடுகிற போது ""அவர் ஈடு இணையற்ற நாயகன்'' என்று ஜூலியன் அஸாஞ்சும் டேனியல் எல்ஸ்பெர்க்கும் குறிப்பிடுகின்றனர். வரலாற்றில் விளையும் பல நேர்மையான மாற்றங்களுக்கு இத்தகையவர்களின் தியாகங்கள் மிக மிக முக்கியமானவையாக இருக்கின்றன.