விக்கிலிக்ஸ் அம்பலங்கள் இந்தியாவின் மரியாதையைக் குறைப்பவர்களை அடையாளம் காட்டுகிறது. காங்கிரஸ் பா.ஜ.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் அருவருப்பான பக்கங்கள் வெளிவந்திருக்கின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2008ல் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு பல கோடி ரூபாய்கள் கைமாறியதை, அமெரிக்க தூதரக அதிகாரிகள், தம் வாஷிங்டன் மேல் அதிகாரிகளுக்குத் தெரிவித்திருக்கின்றனர். அந்தத் தகவல், விக்கிலீக்ஸின் மூலம் வெளியே வந்துவிட, மக்களவையில் அமளி. பிரதமர் எல்லாக் குற்றச்சாட்டையும் நிராகரித்துவிட்டார்.
 வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த விக்கிலிக்ஸ் குற்றச்சாட்டை வாக்குக்குப் பணம் அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டை புலனாய்வு செய்த குழு, அப்படி ஒரு தவறு நடந்ததற்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை கொடுத்துவிட்டது; நாட்டு மக்களும் அந்தக் குற்றச்சாட்டைப் புறம் தள்ளி, காங்கிரஸையே மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர வைத்துவிட்டனர்; எனவே, விக்கிலீக்ஸின் ஆவணங்களை ஏற்க முடியாது என்கிறார் பிரதமர். 
 அடுத்த தினமே, பா.ஜ.க.வின் முகத்திரையும் கிழிந்தது. அரசியல் ஆதாயத்துக்காக பொது மேடைகளில் அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம். ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம் என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர், அமெரிக்க தூதரக அதிகாரியிடம் தெரிவித்த கருத்து, விக்கிலிக்ஸின் மூலம் வெளிவந்துவிட்டது. காங்கிரஸும் பா.ஜ.க.வும் இக்குற்றச்சாட்டுகளைச் சந்திக்கத் திராணியில்லாமல், நழுவிப் போவதற்கான காரணங்களையே அடுக்கிக்கொண்டு இருக்கின்றன. விக்கிலீக்ஸ் ஆவணங்களுக்கு சாட்சி உண்டா, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்களா என்ற கேள்விகள் வெற்று விதண்டாவாதங்கள். இக்கடிதங்கள், இந்தியாவில் இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், வாஷிங்டன் வெளியுறவுத் துறைக்கு எழுதிய ரகசிய குறிப்புகள்.
 இதில்,விக்கிலிக்ஸ் பொய் எழுதவேண்டிய அவசியம் இல்லை. பொய்யை எழுதினால், அது அமெரிக்காவில் தேசத் துரோகக் குற்றமாகக் கருதப்படும் என்பதால், தூதரக அதிகாரிகள் தாம் அறிந்த தகவல்களை, விவரங்களை மட்டுமே தொகுத்து எழுதுவர். மக்கள் வோட்டுப் போட்டு, மீண்டும் ஐக்கிய முன்னணியை ஆட்சிப் பீடத்தில் அமர்த்தியதற்கு அர்த்தம், அவர்கள் குற்றச்சாட்டுகளை நிராகரித்துவிட்டார்கள் என்பதில்லை. மெஜாரிட்டி, குற்றச்சாட்டைக் கழுவும் புனித தீர்த்தமல்ல! அன்று வோட்டுப் போட்ட பலர் இன்று வேதனையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.விக்கிலிக்ஸ் மக்கள்முன் ஒரு முகமும், திரைக்குப் பின் வோறொரு முகமும் காட்டுகின்றன இக்கட்சிகள்.
 சுயலாப நோக்கங்கள், குறுகிய அரசியல் பார்வை, நாட்டைக் குறித்த அக்கறையின்மை ஆகியவை, இத்தகைய இரட்டை நிலைக்குக் காரணங்கள். ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற, தக்கவைத்துக்கொள்ள எத்தகைய இழிவுக்கும் ஆயத்தமாக இருக்கின்றன இக்கட்சிகள். மக்கள் மனத்தில் ஏற்கெனவே மதிப்பிழந்து போன இக்கட்சிகளும் தலைவர்களும், விக்கிலீக்ஸ் ஆவணங்கள் வெளியானதால், மேலும் அசிங்கப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் புனலில் குளித்தெழுந்து இனியேனும் நேர்மை அரசியலை வழங்க கட்சிகளும் தலைவர்களும் முன்வரட்டும்.