1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை
வெளியிட்டது. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும்.
செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி
வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில்
பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870
இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான
நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது.
 
*விண்ணப்பிக்க கடைசித் தேதி:*
 
- எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (
http://tnpsc.gov.in/) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி
வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10
ஆகும்.
- வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி
கடைசி நாளாகும்.
- செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு
நடைபெறும்.
 
*வயது வரம்பு:*
 
- விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும்.
- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும்
பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த
ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.
 
*பாடத் திட்டம்:*
 
- பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள்
கேட்கப்படும்.
- பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது
ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.
- தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும்.
- தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.
 
*விவரங்களுக்கு...:*
 
- விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில் தேர்வாணைய அலுவலகத்தை
நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584),
கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என
அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.