தினசரி காலை வீட்டை விட்டு வெளியே வந்து பாருங்கள். எங்கு பார்த்தாலும் பரபரவென்று மக்கள் அங்கும் இங்குமாக போய்க்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எதைத் தேடி செல்கிறார்கள்? எதை நோக்கி இந்தப் பயணம்? கொஞ்சம் ரிலாக்சாக பார்ப்போம்.
இந்த பரபரப்பு பெரும்பாலும், பணம் சம்பாதிப்பதற்காகத்தான் இருக்கும். இதை தவிர தற்காலிக மகிழ்ச்சி இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. பொழுதுபோக்கின் உச்சகட்டம் என்று துள்ளிக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பொழுதைக் கழிக்க போட்டி போடுகின்றனர். அதனால் தான்...திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், திருவிழாக்கள் என்று மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. விடுமுறை நாட்களில் கிராமங்களில் உள்ளவர்கள் நகரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும், நகரத்தில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்கும் செல்கின்றனர். அங்கும் சென்று குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி விடுகின்றனர். தொழிலதிபர்கள், நடிகர்கள் எல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்ய வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். ஆனால், எல்லா இடங்களுக்கும் சென்று மீண்டும் பழைய இடத்திற்கே வந்து பணிகளைத் தொடங்கும் போது எரிச்சல் தான் வருகிறது. விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, ``ஏன் தான் லீவு முடிஞ்சுதோ? இன்னும் கொஞ்ச நாள் லீவு விட்டு இருக்கக் கூடாதா?'' என்று எரிச்சல்.
இளைஞர்கள் இப்போதெல்லாம் எதையாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டு ரிஸ்க் எடுத்து வருகின்றனர். ``மற்றவர்கள் முன்னிலையில் நான் யார் ? எனது திறமை எப்படிப்பட்டது என்பதைக் காட்ட வேண்டும்'' என்பதற்காக, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். உதாரணமாக, நீர்த்தேக்கங்களில் உயரமான இடத்திலிருந்து டைவ் அடித்து குதிப்பது, நீச்சல் தெரியாத நண்பனை ஆழத்திற்கு கூட்டிச் செல்வது, வேகமாக பைக்கை வளைத்து வளைத்து ஓட்டிச் செல்வது என்று சாகசங்களை செய்கின்றனர். இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள், உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
எல்லாவற்றையும் அனுபவித்தவுடன், ஒருகட்டத்தில் வாழ்க்கையில் ஒரு சலிப்பு வந்து விடுகிறது. சலிப்பு இல்லாமல் வாழ்வது தான் வாழ்க்கை. சலிப்பு இல்லாமல் வாழ வேண்டும் என்றால், நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பது முதலில் நமக்கு புரிய வேண்டும். புரிந்து பயணித்தால் வாழ்க்கை புதுமையானதாய் இன்பம் நிறைந்ததாய்
இருக்கும்.