அக்டோபரில் விண்டோஸ் 8

அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும் அக்டோபரில் வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் சென்ற வாரம் அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். 
விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ வெளியானவுடன், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரையும் வியக்க வைத்தது. டேப்ளட் பிசி மற்றும் டெஸ்க்டாப் பிசி ஆகிய இரண்டையும் இணைத்து வடிவமைக்கப்பட்டதாக விண்டோஸ் 8 உள்ளது. அத்துடன் தொடுதிரை உணர்வு வழி கம்ப்யூட்டர் இயக்கம், வாடிக்கையாளர் மத்தியில் ஆர்வத்தினைத் தூண்டியது. இதுவரை இல்லாத வகையில், அனைத்து பிரிவினரும் ரிலீஸ் பிரிவியூ தொகுப்பினை இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்க்கத் தொடங்கினர். மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தாங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் குறித்தும் கருத்துரைகளை அனுப்பினர். அனைத்தையும் கவனத்தில் கொண்டு விண்டோஸ் 8 இறுதி விற்பனைப் பதிப்பு வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டாலும், இறுதியான தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது அவை அறிவிக்கப்பட்டுள்ளன. 
கம்ப்யூட்டர் தயாரிப்பவர்களுக்கான பதிப்பு தரப்பட்டவுடன், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் ஸ்டோரினை இயக்கத் தொடங்கிவிடும். சோதனை பதிப்பாக வந்த விண்டோஸ் 8 தொகுப்பினை இலவசமாக பெற முடிந்தது. இனி இந்த ஸ்டோர் மூலம் கட்டணம் செலுத்தியே லைசன்ஸ் அனுமதியினைப் பெற முடியும். அண்மையில் டோரண்டோவில் நடைபெற்ற பன்னாட்டளவிலான தன் ஒப்பந்த நிறுவனப் பிரதிநிதிகளிடையே பேசுகையில், மைக்ரோசாப்ட் இதனை அறிவித்துள்ளது. 
"கடந்த 17 ஆண்டுகளில் தங்கள் நிறுவனத்திற்கு இது மிகப் பெரும் சாதனை ஆண்டாக அமையவுள்ளது' என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் பெருமையுடன் தெரிவித்தார். "நிறுவனத்தின் காவிய ஆண்டு இது' எனவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். விண்டோஸ் 8 பதிப்பின் அனைத்து வகைகளும் வெளியிடப்படும். விண்டோஸ் 8 ஆர்.டி. பதிப்பு, பதியப்பட்டு கம்ப்யூட்டர்களுடன் மட்டுமே கிடைக்கும். தனி ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 8 (Windows 8 for x86) போலக் கிடைக்காது. வர்த்தக ரீதியாக விண்டோஸ் 8 வெளியிடப் படுகையில், பழைய சிஸ்டத்திலிருந்து அப்கிரேட் செய்வதற்கான பதிப்பும் விற்பனைக்கு வெளியிடப்படும். இதுவரை விண்டோஸ் 7 ஓ.எஸ். லைசன்ஸ் 63 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது. உலகில் இயங்கும் நிறுவன டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் விண்டோஸ் 8க்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
விண்டோஸ் 8 பதிப்பு 109 மொழிகளில், 231 சந்தைகளில் வெளியிடப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இதுவே ஒரு பெரிய சாதனையாகும்.