Showing posts with label Tamilnadu Politics. Show all posts
Showing posts with label Tamilnadu Politics. Show all posts

வாக்காளர்கள் விட்டில் பூச்சிகளா?

இன்று தமிழகத்தின் இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் காட்டிலும், தமிழர்களின் வாக்குகளை வாங்குவதற்கு இன்றியமையாத் தேவைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து, வாக்குறுதிகளாக்குவதுதான் ஆளும் திமுகவின் குறிக்கோளாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது திமுகவின் தேர்தல் அறிக்கை. தேர்தல் ஆணையம் எதிர்க்க முடியாதபடி எவ்வாறு மக்கள் வரிப் பணத்தை இலவச நலத் திட்டங்கள் என்கிற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கலாம் என்பதை மட்டுமே திமுக யோசிக்கிறது என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.  தேர்தலுக்கு முன்பாக வீடு வீடாக, அவர்களது வாக்காளர் வரிசைஎண் சீட்டுடன் பணக்கட்டுகளை இணைத்து வீசிச் செல்வதற்கும், தேர்தலுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவசப் பொருள்களைக் கொடுப்பதற்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கமுடியும்?

தேர்தல் அறிக்கை என்பது ஒரு மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக இருக்க வேண்டுமே தவிர, மக்களை வெறும் இலவச ஆசைகளில் தள்ளி, காரியம் சாதிப்பதாக இருத்தல் கூடாது. அவர்களது எளிய பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்வது ஆட்சியைப் பிடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்களின் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் பயன்படுமே தவிர, ஒரு மாநிலத்தின் மேம்பாட்டுக்கு எந்த வகையில் உதவும்?  இத்தகைய இலவசத் திட்டங்கள் அரசை கடனாளியாக்குவதோடு, அதைப் பெறும் மக்களையும் கடனாளியாக்கிவிடுகிறது.  தற்போது திமுக இவ்வாறாக இலவசங்களை அறிவித்துள்ளதால், அதிமுகவும் போட்டிக்குச் சில இலவசங்களை அறிவிக்கக்கூடும். இதன் முடிவுதான் என்ன?  

குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இலவச டிவி வழங்கப்பட்டது. வசதி படைத்தவர்களும் இதை ஒரு விளையாட்டாக வாங்கி, குறைந்த விலையில் விற்றார்கள். தமிழ்நாட்டின் எந்த ஊரிலும் சிறிய தங்கும் விடுதிகளில் தமிழக அரசின் இலவச டிவி இருப்பதே இதற்கு சாட்சி.  ÷மேலும் இந்த டிவியைப் பெற ரூ.100 லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த டிவிக்களில் பல உயர்மின்அழுத்தம் தாளாமல் வெடித்தபோது, இந்த டிவி பார்க்கும் வழக்கத்துக்குப் பழகிப்போன ஏழைத் தொழிலாளி புதிதாக பல ஆயிரம் செலவில் மாதத் தவணையில் டிவி வாங்க வேண்டிய குடும்ப நெருக்கடிக்கு ஆளானார். மேலும் மாதம்தோறும் கேபிள் கட்டணம் ரூ.150 (அவருடைய ஒருநாள் கூலி) வழங்க வேண்டியிருந்தது.  ÷இலவச டிவி கொடுத்த அரசு, கேபிள் கட்டணத்தையும் இலவசமாக்கியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியை அரசு கஜானாவில் கையை வைத்து விநியோகித்துத் தங்களது குடும்பக் கேபிள் நிறுவனத்துக்கு வாடிக்கையாளர்களை அதிகரிக்க நடந்த அதிகாரபூர்வமான அதிகார துஷ்பிரயோகத்தைத் தட்டிக் கேட்க முடியாத அளவுக்கு நடந்த விஞ்ஞானபூர்வ முறைகேடுதானே இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டம்?

இதேபோன்று இலவச சமையல் எரிவாயு திட்டத்திலும், ஏழைக்கு தேவையில்லாத செலவை உண்டாக்கியதைத் தவிர வேறு என்ன பலன்? குடும்பத் தலைவர் இந்த இலவச எரிவாயுவை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, பணத்தைக் குடித்துத் தீர்த்தார். பெண்கள் தங்களுக்குக் கிடைத்துவந்த மண்ணெண்ணெய் அளவும் குறைந்துபோனதால் அதிக விலை கொடுத்து மண்ணெண்ணெய் வாங்கும் கட்டாயத்துக்கு உள்ளாகினர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?  அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தாமல், கலைஞர்  காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.1 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை என்று அறிவிக்கப்பட்டாலும், இத்திட்டத்தில் ரூ.80 ஆயிரம் வரை செலவாகும் சிகிச்சைகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன. மேலும், நோய் கண்டறிதலுக்கான மருத்துவ சோதனைச் செலவுகளும், சிகிச்சைக்குப் பிந்தைய மருந்து மாத்திரைகளும் ஒவ்வொருவருக்கும் ரூ.20,000 வரை செலவு வைத்தது. இந்த மாத்திரைகளை அரசு மருத்துவமனையில் வாங்கவும் வழியில்லாமல் போனது. காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தொகையைக்கொண்டு மருத்துவமனைகளை மேம்படுத்தினால், அனைவருக்கும் அங்கே இலவச சிகிச்சை அளிக்க முடியும்.

 தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்கிறது திமுக தேர்தல் அறிக்கை. அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் இலவசக் கல்வி என்று அரசால் அறிவிக்க இயலுமா? ஏனென்றால் அத்தனை தனியார் கல்லூரிகளும் அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவே தமிழக அரசால் முடியவில்லை என்பதுதான் கடந்த இரு ஆண்டுகளாக எல்லோரும் கண்ட காட்சி.  இலவசங்களையும் கடன்பட்டுத்தான் வழங்குகிறார்கள் என்பதோடு, இந்தச் செலவை ஈடுகட்ட மதுக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மதுவினால் வருவாய் கிடைக்கிறது. இந்த மது தயாரிப்பில் லாபம் அடைவோரும் ஆளும்கட்சி அரசியல்வாதிகளே. அண்மையில் ஒரு வாரஇதழில் எந்தெந்த அமைச்சருக்கு மதுபானத் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன, புதிதாக அனுமதி பெற்றுள்ளார்கள் என்று பட்டியலே வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் பணத்தை இப்படியாக மதுவினால் உறிஞ்சி, அதையே திருப்பிக் கொடுப்பது எவ்வகையில் சரி?

இந்தத் திட்டங்களை மிக நுட்பமாக ஆராய்ந்தால், இலவசங்கள் உண்மையில் மக்கள் பணத்தைக் கொண்டுதான் வழங்கப்படுகின்றன என்பதும், இதைப் பெறும் மக்கள் ஒரு ரூபாய் இலவசத்துக்கு இரண்டு ரூபாய் கூடுதல் செலவு செய்ய நேரிடும் அதே வேளையில், அரசியல்வாதிகள் ஒரு ரூபாய்க்கு 50 காசுகள் லாபம் அடைவது நடந்து கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடியும்.  நவராத்திரி கொலுவுக்கு ஆள் சேர்க்க நாள்தோறும் புதுப்புது சுண்டல் கொடுக்கப்படுவதைப் போல, அரியணையில் கொலுவீற்றிருக்க ஒவ்வொரு தேர்தலிலும் புதுப்புது இலவசங்களை அறிவித்து, மக்களைக் கவர்ந்து இழுக்கிறார்கள் அரசியல்வாதிகள். பாவம், வெறும் விட்டில்பூச்சிகள்தானா மக்கள்?

காடுகள்! | Nature Will Help us

ஒரு காலகட்டத்தில் மனிதன் காடுகளை பெருமளவில் நாசப்படுத்தியதோடு, அழித்தும் வந்தான். காடுகள் அவ்வாறு அழிக்கப்பட்டதால் மரங்களும், பிற பயனுக்குரிய பொருட்களும் கிடைக்காமல் போயின. அதுமட்டுமல்ல, தட்பவெப்பநிலை மாறியதோடு, காடுகள் மறைந்த இடங்களில் எல்லாம் பாலைவனங்கள் தோன்றலாயின. அதன் பின்பே காடுகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு பரவலாயிற்று.

 

காடுகள், நீர் வளத்தைப் பாதுகாக்கின்றன. மலைகளில் உள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும்போது, மரங்களின் இலை களால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் விழுகிறது. எனவே அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. அப்படியும் அரித்துச் செல்லும் மண்ணை மலைச் சரிவில் உள்ள மர வேர்கள் தடுத்து விடுகின்றன.

 

மலைகளில் மரங்களே இல்லாதிருந்தால் மழை வேகமாகப் பெய்து, அங்குள்ள வளமான மண்ணை அடித்துக்கொண்டு போய்விடுகிறது. குளிர்காலங்களில் மலையில் பெய்து உறையும் பனி, வெறுந்தரையில் விரைவில் உருகிவிடும். ஆனால் காடுகளில் பெய்யும் பனி மெதுவாகவே உருகும். மேலும் அந்த நீர், நிலங்களுக்கும், பண்ணைகளுக்கும், ஊற்றுகளுக்கும், பூமியின் அடியில் உள்ள ஓடைகளுக்கும் மெதுவாகச் சென்று பரவுகிறது.

 

வேகமான வெள்ளப் பெருக்கு, மரங்களை வீழ்த்தி விடுகிறது. வெற்றிடத்தில் விழும் மழை நீரும், உருகும் பனி நீரும் மெதுவாகச் செல்வதற்குப் பதிலாக துரித கதியில் ஓடி மறைந்து விடுகிறது.

 

வண்டல் மண்ணை வாய்க்கால், ஆறுகள், கடல் ஆகியவற்றுக்கு மழை நீர் இழுத்துச் செல்வதை காடுகள் தடுக்கின்றன. மரங்களின் வேர்களும், கிளைகளும், வண்டல் மண் அரித்துச் செல்லப்படாமல் தடுத்து விடுகின்றன.

 

காடுகள் அழிக்கப்பட்டு மொட்டையாகும் மலைகளில் இருந்து அடித்துச் செல்லப்படும் வண்டல், துறைமுகங்கள், நதிக் கால்வாய்கள் ஆகியவற்றில் படிகிறது. அந்த வண்டல் மண்ணை அகற்றி, ஆழப்படுத்த உலகெங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதே நேரம் வண்டல் அரிக்கப்படும் நிலம் தனது வளத்தை இழப்பதால், விவசாயம் கேள்விக்குறியாகிறது.

 

மனிதன் தனது சுயநலத்தால் எப்படித் தனக்குத் தானே தீங்கு செய்துகொள்கிறான் என்பது இதிலிருந்து புரியும்.